Monday, March 23, 2009

குளம்

"ஆகா! குளத்தில் குளிப்பது எவ்வளவு சுகமானது! அதுவும் இந்த வெயில் காலத்தில்". மனதில் நினைத்துக் கொண்டே முத்து அவன் நண்பர்களோடு அந்த குளத்தில் குளித்தான். முத்துவை பற்றி அந்த ஊரில் உள்ள எல்லோருக்குமே தெரியும். அதுவும் அவன் தந்தையை பற்றி சுற்றி உள்ள பத்து ஊர்களுக்கும் தெரியும். திருவிழாவில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் முத்துவின் தந்தை தான் எப்போதும் பரிசை தட்டிக் கொண்டு செல்வார். 'புலிக்கு பிறந்தது பூனையாகுமா?' என்ற ரீதியில் தான் முத்துவும் இருந்தான்.
ஊர் அம்பலகாரருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள குளம் அது. முத்துவும் அவன் நண்பர்களும் குளிப்பதை அவரே பார்த்திருக்கிறார். ஆனால் அவர் அவர்களை ஒன்றும் சொல்வதில்லை. சின்னப்பசங்க என்று விட்டு விடுவார் போலும். அவருடைய வேலையாட்கள் தான் ரொம்ப மோசம். முத்துவும் அவன் நண்பர்களும் குளிப்பதை பார்த்தால் உடனே விரட்டி விடுவர். அதுவும் சின்னா படு மோசம். ஒரு நாள் தனியாக மாட்டாமலா போய்விடுவான் என்று முத்து மனதில் நினைத்துக் கொண்டான். இந்த எண்ணங்கள் எல்லாம் மனதில் எழுந்தாலும் முத்து அதை ஒதுக்கி விட்டு ஜாலியாக குளித்துக்கொண்டிருந்தான்.
அப்போது எங்கோ இருந்து அந்த கல் பறந்து வந்தது. அவர்களில் ஒருவனை சற்றே உரசிக்கொண்டு சென்றது. சின்னாதான் அது. "நாய்ங்க! எத்தனை தடவை விரட்டினாலும் இங்கேயே வருதுங்க." மீண்டும் ஒரு கல்லை எடுத்தான். அதற்குள் அவர்கள் நால்வரும் குளத்தை விட்டு வேகமாக வெளியேறி ஓடினர். இரண்டாவது கல் இன்னொருவனின் காலை பதம் பார்த்தது. ஒரே ஓட்டமாக ஓடியவர்கள் ஊர் எல்லையில் உள்ள காய்ந்த புளியமரத்தடியில் தான் நின்றனர்.
அடிபட்டவனுக்கு காலில் இருந்து இரத்தம் வந்தது. முத்துதான் பேச்சை ஆரம்பித்தான். "ச்சே! எதோ நாயை விரட்டுவது போல் அல்லவா நம்மை விரட்டி விட்டான்". நண்பன் 1:- நம் வழியில் அடிக்கடி குறுக்கே வருகிறான். நம்மை ரொம்பவும் தான் கேவலப்படுத்துகிறான்". முத்து தொடர்ந்தான், "ஏற்கனவே அவனை எச்சரித்தோம். ஆனால் அவன் கேட்பதாக இல்லை. இனி அவன் எதையும் கேட்கவே கூடாது.""என்னடா சொல்லற?" கேட்டான் இன்னொரு நண்பன். "அவன் கதையை முடிக்க வேண்டும் என்கிறேன்" பதிலளித்தான் முத்து. "இது கொஞ்சம் ஓவர்" இன்னொரு நண்பன். "என்னடா ஓவர்? ஏதோ நாய் மாதிரி நம்மை விரட்டி இருக்கிறான். நம்ம மானமே போச்சு. நல்ல வேலை அங்கே யாரும் இல்லை. ஒருவேளை யாராவது பார்த்து என் அப்பாவிடம் போய் சொல்லியிருந்தால் என்ன ஆகியிருக்கும். எங்கப்பாவோட மரியாதை என்ன ஆகியிருக்கும். முருகனோட பையனை யாரோ ஓட ஓட விரட்டுனாங்கலாமே என்று ஊரே பேசும். என் அப்பா பிறகு வெளியே தலை நிமிர்ந்து நடக்கவே முடியாது. நல்ல வேலை அப்படி நடக்கவில்லை. இனிமே அப்படி நடக்கவும் கூடாது. அவனை கொன்றால் தான் மற்றவர்க்கும் நம்மேல் ஒரு பயம் இருக்கும்." முத்து கொதித்தான். "ஆனா நமக்கு ஏதாவது பிரச்சினை வரலாம்" என்றான் நண்பன். "என்னடா பிரச்சினை வரும்? போலீஸ் கைது பண்ணுமா? நம்மை பார்த்துதான் அவர்கள் பயப்படுவார்கள். நம்ம ஏரியாவுல எவ்வளோ பிரச்சினை வந்திருக்கும். எந்த போலீஸ்காரன் நம்மை என்ன பண்ணினான்? அவர்களுக்கு நம்மை கண்டால் பயம்" அது ஏனோ போலீஸ் இவர்களை ஒன்றும் செய்வதில்லை. ஊர் அம்பலகாரரைக்கூட ஒரு முறை போராட்டம் செய்தார் என்று கைது செய்தார்கள். ஆனால் இவர்களை ஒன்றும் செய்ய மாட்டார்கள். ஒரு வேலை சாதி பிரச்சினை வரும் என்று ஒதுங்கி விடுகிறார்களோ என்னவோ?
"இருந்தாலும் வேறு ஏதாவது பிரச்சினை.." இழுத்தான் நண்பன் ஒருவன். "டேய். பயந்தா வாழ முடியாதுடா. இன்று நான் அவனை கொல்லத்தான் போறேன். பயப்படாதவன் மட்டும் கூட வாங்கடா..!" யாருமே உடன் செல்லவில்லை. 'ம்ஹூம். பயந்தாங்கொள்ளிகள்" முனகிக்கொண்டே சென்றான் முத்து.
சின்னாவை தேடினான். சின்னா அங்கே தோட்டத்தில்தான் வேலை செய்து கொண்டிருந்தான். சுற்றிலும் ஆள் அரவமில்லாமல் இருந்தது. இது தான் சரியான நேரம். இப்பொழுதே அவனை முடித்து விட வேண்டியதுதான். மனதில் நினைத்துக் கொண்டான். எப்படி கொலை செய்வது என்ற கேள்விக்கே இடமில்லை. முத்து எப்போதும் கூறிய ஆயுதம் ஒன்று வைத்திருப்பான். ஒரே குத்தில் அவனை கொன்று விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். இதோ அவன் அருகில் சென்று விட்டேன். வேளையில் கண்ணாக இருந்ததில் அவன் என்னை கவனிக்கவில்லை. இதோ ஒரே சொருகு. சின்னா வழியில் துடித்துக் கொண்டிருக்க முத்து அங்கிருந்து கிளம்பினான். சத்தம் கேட்டு அங்கு வந்தவர்கள் முத்து விலகிச்செல்வதை பார்த்தார்கள். சின்னா மருத்துவமனை போய் சேருமுன் இறந்து விட்டான். மறுநாள் செய்தித்தாளில் ஏழாம் பக்கத்தில் ஒரு சிறிய செய்தி பிரசுரமாகியிருந்தது,
"மாடு முட்டி வாலிபர் பரிதாப மரணம்"
என்ற தலைப்போடு. இ.பி.கோவின் எந்த பிரிவாலும் மாடுகளை தண்டிக்க முடியாதாம். அதனால் போலீஸ் முத்துவை ஒன்றும் செய்யவில்லை.
அங்கே முத்து சின்னாவை குத்திக் கிழித்த தன் கொம்புகளை நினைத்து பெருமைப் பட்டுக் கொண்டான்.

Monday, March 16, 2009

Police Diary - 2 (Continuation of Police Diary - 1)

Police Diary:
என் பெயரை போன குறிப்பிலேயே சொல்லியிருக்க வேண்டும். மறந்து விட்டேன். சாரி. நான் விஜயன். கும்மிடிபூண்டி எஸ்.ஐ. இந்த ஏரியா எஸ்.ஐ. ஆக பொறுப்பெடுத்து இரண்டு வருடம் ஆகிறது. 'பொறுப்பெடுத்து' என்பது சும்மா. இலஞ்சம் தான் எனக்கு எல்லாமே. பிற தவறுகளும் செய்வது உண்டு. சென்ற வாரம் கூட ஒரு பெண்ணை பிடித்து இழுத்ததில் அவள் நிலை தடுமாறி விழுந்ததில் தலையில் அடிபட்டு இறந்தாள். கொலைப் பலியை வெற்றிகரமாக மாரிமுத்துவின் மீது போட்டாயிற்று. கேஸை மூடியாயிற்று.
இன்று காலை வீட்டில் இருந்து கிளம்பும் போது ஒரு கேரேஜ் ஓனர் ஃபோன் செய்தார். ஒரு கேஸில் அவர் பெயர் அடிபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமாம். முழுதாக இரண்டு இலட்சம் தருகிறேன் என்று சொன்னார். அவரை பார்க்கத்தான் இந்த இரவில் போய்க்கொண்டிருக்கிறேன்.

Murali's Diary
:
ச்சே! என்னை ரொம்பவும் தான் கேவலப்படுத்தி விட்டான் என் நண்பன் கார்த்தி. நான் ரொம்பவும் கோழையாம். எதற்கெடுத்தாலும் பயப்படுவேனாம். எப்பவும் செய்யும் கிண்டல்தான். ஆனால் இன்று பலர் மத்தியில் வைத்து அசிங்கப்படுத்தி விட்டான். எனக்கு தூக்கு மாட்டிக்கொண்டு சாகலாம் போல் இருந்தது. நான் ஏன் சாக வேண்டும். நான் கோழையல்ல இன்று அவனிடம் நிரூபிக்க வேண்டும். எப்படி நிரூபிப்பது?
இதற்காக நான் என்ன தீவிரவாதிகளை எதிர்த்து சண்டையா போட முடியும். வேறு ஏதாவது செய்தாக வேண்டும். வேறு என்ன செய்வது?... பேசாமல் யாரையாவது கொலை செய்து விடலாம். எப்படி கொலை செய்வது? போலீஸ தேடுமே! அதிலிருந்து தப்பிக்க ஒரு வழி தான் உள்ளது. சமீப காலமாக ஒரு சைக்கோ சென்னையில் நிறைய கொலைகளை செய்கிறானாம். நடு இரவில் யார் தலையிலாவது கல்லை போட்டு கொலை செய்கிறானாம். நாமும் அதே வழியில் கொலை செய்வோம். பழி அவன் மீதே விழட்டும்.
கொலை செய்யப்படும் நபரும் பெரிய ஆளாக இருக்க வேண்டும். எஸ்.ஐ. விஜயன் இன்று யாரையோ சந்திக்க கும்மிடிப்பூண்டி அருகே இருக்கும் ஒரு கேரேஜுக்கு போறாராம். விஜயன் வீடு கார்த்தியின் வீட்டருகே தான் உள்ளது. காலையில் அவர் பேசும் போது நான் தற்செயலாக ஒட்டுக்கேட்டேன். எதிலும் இலஞ்சம் என்பது தான் அவருடைய தாரக மந்திரம். அவரையே கொலை செய்யலாம். கார்த்திக்கும் ஃபோன் செய்து முதலிலேயே சொல்லிவிட வேண்டும். இல்லை என்றால் நம்ப மாட்டான்.
கார்த்திக்கு ஃபோன் செய்தாயிற்று. பாவி இப்போதும் நம்ப மாட்டேன் என்கிறான். எஸ்.ஐ. இரவு பத்து மணிக்கு வருவதாக சொன்ன இடத்தில் அவருக்கு முன்னதாகவே அங்கே சென்று காத்திருந்தேன். ஒரு பெரிய கல்லையும் தேர்வு செய்து எடுத்து வைத்திருக்கிறேன். ஆ! அதோ எஸ்.ஐ. வந்து விட்டார். அருகில் வரட்டும். நாம் செல்ல வேண்டாம். கையில் கல்லுடன் நம்மை பார்த்தால் சந்தேகப்படுவார். இங்கேயே மறைந்து இருப்போம். இதோ நெருங்கி வருகிறார். வந்து விட்டார். 'மடார்'. அப்பாடி ஒரு வழியாக கல்லை போட்டாகி விட்டது. உயிர் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். நல்ல வேளை. மூச்சு உடனே நின்று விட்டது. இரத்தம் இன்னும் வந்து கொண்டு இருக்கிறது. யாரும் வரும் முன்பு இங்கிருந்து கிளம்பி விட வேண்டும்.
சற்று தூரம் தான் நடந்தேன். யாரோ என் பின்னால் இருந்து என்னை பிடித்து தள்ளினார்கள். நான் குப்புற விழுந்தேன். திரும்பிப் பார்த்தேன். யாரோ ஒருவன் ஒரு பெரிய கல்லை கையில் வைத்துக்கொண்டு நின்றிருந்தான். அவனை பார்த்தவுடன் ஒரு வித பயம் வந்தது. "இவன் தான் உண்மையான சைக்கோவா?" மனதில் எண்ணவோட்டங்கள் எழ ஆரம்பித்த அதே வினாடியில் கல் வேகமாக என் தலையை நோக்கி வந்தது. "மடேர்".

Tuesday, March 10, 2009

Police Diary - 1

இந்த ஏரியாவில் நான் எஸ்.ஐ.யாக பொறுப்பேற்றதில் இருந்தே பிரச்சினை தான். கொஞ்சம் கூட சும்மா இருக்க விடுவதில்லை. ஒரே கொலை, கொள்ளை. சே.. இன்று காலை கூட ஒரு பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தாள். அதுவும் என் வீட்டு தெரு கடைசியில்.. இப்பொழுது கூட விசாரணைக்காகத்தான் ஸ்பாட்டுக்கு வந்திருக்கிறேன்.
கழுத்து அறுக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தாள். சற்று அழகாகவே இருந்தாள். பணத்திற்காக கொலை செய்யப்படவில்லை என்பது அவள் காதில் இருந்த தங்கத் தோட்டில் இருந்தே தெரிந்தது. உடை அங்கங்கே சற்று கிழிந்திருந்ததை வைத்து அவளை யாரோ கற்பழிக்க முற்பட்டு இறுதியில் கொலை செய்திருக்கிறார்கள் என்று யார் வேண்டுமென்றாலும் கணித்து சொல்லி விடுவார்கள். தடயம் எதுவும் கிடைக்கிறதா என்று சோதனை செய்தாயிற்று. ஒரு சிறு தடயம் கூட அகப்படவில்லை. "கொலைகாரன் ரொம்ப லக்கி" ஏட்டு சொன்னார். "அப்படியா? பார்க்கலாம்" நான் மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். கொலையை நேரில் பார்த்தவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. எப்படியும் நள்ளிரவு தாண்டி தான் நடந்திருக்கும். சட்டென்று ஒரு பொறி தட்டியது. மாரிமுத்து தெருக் கோடியில் தானே பெட்டிக் கடை வைத்திருக்கிறான். இரவு ஒரு மணிக்கு தான் கடையை பூட்டுவான். தூங்குவதும் அங்கேயே தான். அவன் கொலையை பார்த்திருக்கக்கூடும். அவன் அங்கே இல்லை. இது இன்னும் சந்தேகத்தை வலுப்படுத்தியது. ஏட்டும் இதை கவனித்து விட்டார். "அவனே ஒரு வேளை கொலைகாரனாக இருக்கலாம்" ஏட்டு சொன்னார். அவன் தன் தங்கையின் வீட்டில் தான் இருப்பான். உடனே சென்றால் பிடித்து விடலாம். நேரே அங்கே சென்றேன். ஏட்டு கூட வருகிறேன் என்று சொன்னார். "கொலைகாரப் பயல். ஜாக்கிரதையாக இருக்கணும்" ஏட்டு சொன்னார். "இன்னும் விசாரணை முடியலை. அவன் சாட்சியாகவும் இருக்கலாம். அதற்குள் கொலைகாரன் என்று சொல்லாதீர்கள்" என்று சொல்லிவிட்டு ஏட்டுக்கு வேறு வேலை கொடுத்து விட்டு நான் மட்டும் அவனை தேடி அங்கிருந்து கிளம்பினேன்.
அந்த வீடு ஒரு சந்தின் கடைசியில் இருந்தது. உள்ளே சென்றேன். என்னை பார்த்ததும் பயந்து விட்டான். நான் சந்தேகப் பட்டது சரியாகப் போய் விட்டது. அங்கிருந்து நழுவப் பார்த்தான். விரட்டிச் சென்றேன். மெயின் ரோட்டை நோக்கி ஓடினான். நழுவ விட்டு விடக் கூடாது என்பதில் குறியாக இருந்தேன். மெயின் ரோடு திருப்பத்தில் திரும்பும் போது எதிரே வந்த லாரி அவன் மீது மோதியது. இரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தான். நான் அருகே சென்றேன். அவன் என்னை வெறித்து பார்த்தான்.
அந்த பார்வைக்கு அர்த்தம் எனக்கு மட்டும் தான் தெரியும். நேற்று இரவு இரண்டு மணியளவில் நான் பணி முடிந்து வீட்டிற்கு வரும் வழியில் தெரு கோடியில் அவளை பார்த்தேன். ஆசை என்னை உந்தித்தள்ள அவளை பிடித்து இழுத்தேன். அப்பொழுது அவள் எதிர்பாராத விதமாக கீழே விழ அங்கிருந்த கல் அவள் தலையை பதம் பார்த்தது. பின் அவள் எழவே இல்லை. உயிர் பிரிந்து விட்டது என தெரிந்ததும் அங்கிருந்து கிளம்பினேன். மாரிமுத்துவை பற்றி யோசிக்கவே இல்லை. காலையில் தான் ஞாபகம் வந்தது. அவனையும் எப்படியாவது முடித்து விட வேண்டும் என்று தான் இங்கே வந்தேன். நல்ல வேளை அவனாகவே விபத்தில் இறந்து விட்டான். இனி இந்த விஷயம் யாருக்கும் தெரியாது.

Wednesday, March 4, 2009

Terror Attack on Lankan Team


We can't say where Pakistan is heading towards these days? It's slowly turning into an Anarchy. I think the number of terrorist organizations in Pakistan will outnumber its population soon. If the government can't provide security to VIP's then how can they provide security to the normal people. This might be the end of Pakistan Cricket. And may be the end of some SL players (with a Bullet wound in thigh there is little hope to play an international game). Hope the players may break our pessimism.
If people all over the world is talking about this attack, why are they not caring enough for the genocide done by Sri Lanka against the Tamils?