Monday, March 16, 2009

Police Diary - 2 (Continuation of Police Diary - 1)

Police Diary:
என் பெயரை போன குறிப்பிலேயே சொல்லியிருக்க வேண்டும். மறந்து விட்டேன். சாரி. நான் விஜயன். கும்மிடிபூண்டி எஸ்.ஐ. இந்த ஏரியா எஸ்.ஐ. ஆக பொறுப்பெடுத்து இரண்டு வருடம் ஆகிறது. 'பொறுப்பெடுத்து' என்பது சும்மா. இலஞ்சம் தான் எனக்கு எல்லாமே. பிற தவறுகளும் செய்வது உண்டு. சென்ற வாரம் கூட ஒரு பெண்ணை பிடித்து இழுத்ததில் அவள் நிலை தடுமாறி விழுந்ததில் தலையில் அடிபட்டு இறந்தாள். கொலைப் பலியை வெற்றிகரமாக மாரிமுத்துவின் மீது போட்டாயிற்று. கேஸை மூடியாயிற்று.
இன்று காலை வீட்டில் இருந்து கிளம்பும் போது ஒரு கேரேஜ் ஓனர் ஃபோன் செய்தார். ஒரு கேஸில் அவர் பெயர் அடிபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமாம். முழுதாக இரண்டு இலட்சம் தருகிறேன் என்று சொன்னார். அவரை பார்க்கத்தான் இந்த இரவில் போய்க்கொண்டிருக்கிறேன்.

Murali's Diary
:
ச்சே! என்னை ரொம்பவும் தான் கேவலப்படுத்தி விட்டான் என் நண்பன் கார்த்தி. நான் ரொம்பவும் கோழையாம். எதற்கெடுத்தாலும் பயப்படுவேனாம். எப்பவும் செய்யும் கிண்டல்தான். ஆனால் இன்று பலர் மத்தியில் வைத்து அசிங்கப்படுத்தி விட்டான். எனக்கு தூக்கு மாட்டிக்கொண்டு சாகலாம் போல் இருந்தது. நான் ஏன் சாக வேண்டும். நான் கோழையல்ல இன்று அவனிடம் நிரூபிக்க வேண்டும். எப்படி நிரூபிப்பது?
இதற்காக நான் என்ன தீவிரவாதிகளை எதிர்த்து சண்டையா போட முடியும். வேறு ஏதாவது செய்தாக வேண்டும். வேறு என்ன செய்வது?... பேசாமல் யாரையாவது கொலை செய்து விடலாம். எப்படி கொலை செய்வது? போலீஸ தேடுமே! அதிலிருந்து தப்பிக்க ஒரு வழி தான் உள்ளது. சமீப காலமாக ஒரு சைக்கோ சென்னையில் நிறைய கொலைகளை செய்கிறானாம். நடு இரவில் யார் தலையிலாவது கல்லை போட்டு கொலை செய்கிறானாம். நாமும் அதே வழியில் கொலை செய்வோம். பழி அவன் மீதே விழட்டும்.
கொலை செய்யப்படும் நபரும் பெரிய ஆளாக இருக்க வேண்டும். எஸ்.ஐ. விஜயன் இன்று யாரையோ சந்திக்க கும்மிடிப்பூண்டி அருகே இருக்கும் ஒரு கேரேஜுக்கு போறாராம். விஜயன் வீடு கார்த்தியின் வீட்டருகே தான் உள்ளது. காலையில் அவர் பேசும் போது நான் தற்செயலாக ஒட்டுக்கேட்டேன். எதிலும் இலஞ்சம் என்பது தான் அவருடைய தாரக மந்திரம். அவரையே கொலை செய்யலாம். கார்த்திக்கும் ஃபோன் செய்து முதலிலேயே சொல்லிவிட வேண்டும். இல்லை என்றால் நம்ப மாட்டான்.
கார்த்திக்கு ஃபோன் செய்தாயிற்று. பாவி இப்போதும் நம்ப மாட்டேன் என்கிறான். எஸ்.ஐ. இரவு பத்து மணிக்கு வருவதாக சொன்ன இடத்தில் அவருக்கு முன்னதாகவே அங்கே சென்று காத்திருந்தேன். ஒரு பெரிய கல்லையும் தேர்வு செய்து எடுத்து வைத்திருக்கிறேன். ஆ! அதோ எஸ்.ஐ. வந்து விட்டார். அருகில் வரட்டும். நாம் செல்ல வேண்டாம். கையில் கல்லுடன் நம்மை பார்த்தால் சந்தேகப்படுவார். இங்கேயே மறைந்து இருப்போம். இதோ நெருங்கி வருகிறார். வந்து விட்டார். 'மடார்'. அப்பாடி ஒரு வழியாக கல்லை போட்டாகி விட்டது. உயிர் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். நல்ல வேளை. மூச்சு உடனே நின்று விட்டது. இரத்தம் இன்னும் வந்து கொண்டு இருக்கிறது. யாரும் வரும் முன்பு இங்கிருந்து கிளம்பி விட வேண்டும்.
சற்று தூரம் தான் நடந்தேன். யாரோ என் பின்னால் இருந்து என்னை பிடித்து தள்ளினார்கள். நான் குப்புற விழுந்தேன். திரும்பிப் பார்த்தேன். யாரோ ஒருவன் ஒரு பெரிய கல்லை கையில் வைத்துக்கொண்டு நின்றிருந்தான். அவனை பார்த்தவுடன் ஒரு வித பயம் வந்தது. "இவன் தான் உண்மையான சைக்கோவா?" மனதில் எண்ணவோட்டங்கள் எழ ஆரம்பித்த அதே வினாடியில் கல் வேகமாக என் தலையை நோக்கி வந்தது. "மடேர்".

No comments:

Post a Comment

Awaiting for your Comments