Monday, March 23, 2009

குளம்

"ஆகா! குளத்தில் குளிப்பது எவ்வளவு சுகமானது! அதுவும் இந்த வெயில் காலத்தில்". மனதில் நினைத்துக் கொண்டே முத்து அவன் நண்பர்களோடு அந்த குளத்தில் குளித்தான். முத்துவை பற்றி அந்த ஊரில் உள்ள எல்லோருக்குமே தெரியும். அதுவும் அவன் தந்தையை பற்றி சுற்றி உள்ள பத்து ஊர்களுக்கும் தெரியும். திருவிழாவில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் முத்துவின் தந்தை தான் எப்போதும் பரிசை தட்டிக் கொண்டு செல்வார். 'புலிக்கு பிறந்தது பூனையாகுமா?' என்ற ரீதியில் தான் முத்துவும் இருந்தான்.
ஊர் அம்பலகாரருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள குளம் அது. முத்துவும் அவன் நண்பர்களும் குளிப்பதை அவரே பார்த்திருக்கிறார். ஆனால் அவர் அவர்களை ஒன்றும் சொல்வதில்லை. சின்னப்பசங்க என்று விட்டு விடுவார் போலும். அவருடைய வேலையாட்கள் தான் ரொம்ப மோசம். முத்துவும் அவன் நண்பர்களும் குளிப்பதை பார்த்தால் உடனே விரட்டி விடுவர். அதுவும் சின்னா படு மோசம். ஒரு நாள் தனியாக மாட்டாமலா போய்விடுவான் என்று முத்து மனதில் நினைத்துக் கொண்டான். இந்த எண்ணங்கள் எல்லாம் மனதில் எழுந்தாலும் முத்து அதை ஒதுக்கி விட்டு ஜாலியாக குளித்துக்கொண்டிருந்தான்.
அப்போது எங்கோ இருந்து அந்த கல் பறந்து வந்தது. அவர்களில் ஒருவனை சற்றே உரசிக்கொண்டு சென்றது. சின்னாதான் அது. "நாய்ங்க! எத்தனை தடவை விரட்டினாலும் இங்கேயே வருதுங்க." மீண்டும் ஒரு கல்லை எடுத்தான். அதற்குள் அவர்கள் நால்வரும் குளத்தை விட்டு வேகமாக வெளியேறி ஓடினர். இரண்டாவது கல் இன்னொருவனின் காலை பதம் பார்த்தது. ஒரே ஓட்டமாக ஓடியவர்கள் ஊர் எல்லையில் உள்ள காய்ந்த புளியமரத்தடியில் தான் நின்றனர்.
அடிபட்டவனுக்கு காலில் இருந்து இரத்தம் வந்தது. முத்துதான் பேச்சை ஆரம்பித்தான். "ச்சே! எதோ நாயை விரட்டுவது போல் அல்லவா நம்மை விரட்டி விட்டான்". நண்பன் 1:- நம் வழியில் அடிக்கடி குறுக்கே வருகிறான். நம்மை ரொம்பவும் தான் கேவலப்படுத்துகிறான்". முத்து தொடர்ந்தான், "ஏற்கனவே அவனை எச்சரித்தோம். ஆனால் அவன் கேட்பதாக இல்லை. இனி அவன் எதையும் கேட்கவே கூடாது.""என்னடா சொல்லற?" கேட்டான் இன்னொரு நண்பன். "அவன் கதையை முடிக்க வேண்டும் என்கிறேன்" பதிலளித்தான் முத்து. "இது கொஞ்சம் ஓவர்" இன்னொரு நண்பன். "என்னடா ஓவர்? ஏதோ நாய் மாதிரி நம்மை விரட்டி இருக்கிறான். நம்ம மானமே போச்சு. நல்ல வேலை அங்கே யாரும் இல்லை. ஒருவேளை யாராவது பார்த்து என் அப்பாவிடம் போய் சொல்லியிருந்தால் என்ன ஆகியிருக்கும். எங்கப்பாவோட மரியாதை என்ன ஆகியிருக்கும். முருகனோட பையனை யாரோ ஓட ஓட விரட்டுனாங்கலாமே என்று ஊரே பேசும். என் அப்பா பிறகு வெளியே தலை நிமிர்ந்து நடக்கவே முடியாது. நல்ல வேலை அப்படி நடக்கவில்லை. இனிமே அப்படி நடக்கவும் கூடாது. அவனை கொன்றால் தான் மற்றவர்க்கும் நம்மேல் ஒரு பயம் இருக்கும்." முத்து கொதித்தான். "ஆனா நமக்கு ஏதாவது பிரச்சினை வரலாம்" என்றான் நண்பன். "என்னடா பிரச்சினை வரும்? போலீஸ் கைது பண்ணுமா? நம்மை பார்த்துதான் அவர்கள் பயப்படுவார்கள். நம்ம ஏரியாவுல எவ்வளோ பிரச்சினை வந்திருக்கும். எந்த போலீஸ்காரன் நம்மை என்ன பண்ணினான்? அவர்களுக்கு நம்மை கண்டால் பயம்" அது ஏனோ போலீஸ் இவர்களை ஒன்றும் செய்வதில்லை. ஊர் அம்பலகாரரைக்கூட ஒரு முறை போராட்டம் செய்தார் என்று கைது செய்தார்கள். ஆனால் இவர்களை ஒன்றும் செய்ய மாட்டார்கள். ஒரு வேலை சாதி பிரச்சினை வரும் என்று ஒதுங்கி விடுகிறார்களோ என்னவோ?
"இருந்தாலும் வேறு ஏதாவது பிரச்சினை.." இழுத்தான் நண்பன் ஒருவன். "டேய். பயந்தா வாழ முடியாதுடா. இன்று நான் அவனை கொல்லத்தான் போறேன். பயப்படாதவன் மட்டும் கூட வாங்கடா..!" யாருமே உடன் செல்லவில்லை. 'ம்ஹூம். பயந்தாங்கொள்ளிகள்" முனகிக்கொண்டே சென்றான் முத்து.
சின்னாவை தேடினான். சின்னா அங்கே தோட்டத்தில்தான் வேலை செய்து கொண்டிருந்தான். சுற்றிலும் ஆள் அரவமில்லாமல் இருந்தது. இது தான் சரியான நேரம். இப்பொழுதே அவனை முடித்து விட வேண்டியதுதான். மனதில் நினைத்துக் கொண்டான். எப்படி கொலை செய்வது என்ற கேள்விக்கே இடமில்லை. முத்து எப்போதும் கூறிய ஆயுதம் ஒன்று வைத்திருப்பான். ஒரே குத்தில் அவனை கொன்று விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். இதோ அவன் அருகில் சென்று விட்டேன். வேளையில் கண்ணாக இருந்ததில் அவன் என்னை கவனிக்கவில்லை. இதோ ஒரே சொருகு. சின்னா வழியில் துடித்துக் கொண்டிருக்க முத்து அங்கிருந்து கிளம்பினான். சத்தம் கேட்டு அங்கு வந்தவர்கள் முத்து விலகிச்செல்வதை பார்த்தார்கள். சின்னா மருத்துவமனை போய் சேருமுன் இறந்து விட்டான். மறுநாள் செய்தித்தாளில் ஏழாம் பக்கத்தில் ஒரு சிறிய செய்தி பிரசுரமாகியிருந்தது,
"மாடு முட்டி வாலிபர் பரிதாப மரணம்"
என்ற தலைப்போடு. இ.பி.கோவின் எந்த பிரிவாலும் மாடுகளை தண்டிக்க முடியாதாம். அதனால் போலீஸ் முத்துவை ஒன்றும் செய்யவில்லை.
அங்கே முத்து சின்னாவை குத்திக் கிழித்த தன் கொம்புகளை நினைத்து பெருமைப் பட்டுக் கொண்டான்.

No comments:

Post a Comment

Awaiting for your Comments